Thursday, June 17, 2021

எழுபதிலும்_ஆசை_வரும்

 #எழுபதிலும்_ஆசை_வரும்..

#குட்டிக்கதை


" இந்த மனுஷர் போக்கு கொஞ்ச நாளாவே சரியில்லை..எந்த வேலைன்னாலும் பர்ஃபக்ட செய்யறவருக்கு ..இப்போ என்ன ஆச்சு'.. யோசனையில் இருந்தாள்  காந்திமதி அம்மாள்.


" இவ கிட்ட எப்படி சொல்றது..சொன்னால் எப்படி ரியாக்ட் பண்ணுவாள். இந்த வயசில இப்படி ஒரு ஆசையானு திட்டுவாளோ'..

மனசுக்குள் எத்தனை ஒத்திகை பார்த்தும்..காந்திமதியைப் பார்த்ததும் ..வேண்டாம் வேண்டாம் எதுக்கு?  கடந்து போக ஆரம்பித்தார் வெங்கடாசலம்..


" என்னங்க..காய்க்காரம்மா கிட்ட சொல்லி கொஞ்சம் தாராளமா பச்சை மிளகாய் கொடுக்கச் சொல்லுங்க..கத்திரிக்காயும் , வெண்டைக்காயும் வாங்கிண்டு வந்துடுடுங்க'..

அப்படியே..வர வழியில் பால் பூத்திலிருந்து அரை லிட்டர் எக்ஸ்ட்ரா பால் வாங்கிண்டு வாங்க'


காலை வாக்கிங் புறப்படவருக்கு..கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தாள் காந்திமதி.


ஒன்றரை மணி நேரம் கழித்து வந்தவர்..பையைக் கொட்ட..

" ஏங்க..கொஞ்சம் நல்ல பிஞ்சா பத்து எடுத்துட்டு வரக்கூடாதா..பாதியும் முத்தல்..


கோவமாக வந்தது அவளுக்கு..

நீங்க முன்னாடி மாதிரி இல்லீங்க..இப்படி ஏனோதானோனோனு செய்ய மாட்டீங்களே?

அது சரி..பால் ..எங்கே?

" ஓ..மறந்துட்டேன்ம்மா'..

"சரி..சரி..சாயங்காலம் போகும்போது மறக்காம  வாங்கிண்டு வாங்க..'


காந்திமதி வெங்கடாசலம் தம்பதி..

ஒரே பையன் தான் அவர்களுக்கு . கல்யாணமாகி குழந்தையுடன் நாக்பூரில் இருக்கிறான்..

இவர்களுக்கு சென்னை தான் சுகம்.


அங்கே இருக்கும் குளுரும் வெய்யிலும் தாக்குப் பிடிக்க முடிவதில்லை.


 "அப்பா..உங்களுக்கு எழுபது ஆயாச்சு..இன்னும் இப்படி எதுக்கு தனியா இருக்கணும்?'

 பையன் பேச்சுக்கு இவர்கள் ஏதோ காரணம்  சொல்லி கடத்திக் கொண்டிருந்தார்கள்.


 காந்திமதி அம்மாள்..நாள் முழுதும் பிஸி தான்..கிச்சன், பூஜை,டீவி, சீரியல் இப்படியே நேரம் முடிந்து விடும்.

வெங்கடாசலம் தான் வெளி வேலை எல்லாம் பார்ப்பார்.


" இந்தாங்க காஃபி'..நல்லா தூங்கற மனுஷனை எழுப்பி காஃபி குடிக்க வைப்பதில் அவளுக்கு எப்படி என்னதான் அலாதி சந்தோஷமோனு..நொந்து போவார்..


ஒரு வாரமாக..எப்படி இவகிட்ட பேச்சை ஆரம்பிக்கிறது என்ற யோசனையிலேயே..எந்த வேலையிலும் மனசு செல்லவில்லை..


சாயங்காலமும் வாக்கிங் போய்ட்டு வந்தவர்..சுரத்தே இல்லாமல் இருப்பதைக் கண்டாள்..

" என்ன ஆச்சு உங்களுக்கு..டாக்டர் கிட்ட போகலாம் வாங்க' கொஞ்சம் பயம் வந்தது காந்திமதிக்கு..


"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..நான் நல்லாத்தான் இருக்கேன்'..அடக்கினார் அவளை..

' நீங்க இப்படி சிடுசிடுனு பேசவே மாட்டீங்களேங்க..என்னதான் ஆச்சு?.'..


" உன் கிட்ட ரொம்ப நாளா ஒண்ணு கேட்கணும்னு ஆசை..கோவிக்க மாட்டியே?'

தயங்கித் தயங்கி கேட்க..

" சொல்லுங்க..எதுக்கு இத்தனை பீடிகை?'.


"நாளையிலேர்ந்து என்னோட காலையில் வாக்கிங்...வாயேன்....


கேட்டவர்..தொடர்ந்தார்..


 "அப்படியே காலாற நடந்து ,என்னென்னெ வேணுமோ வாங்கிட்டு நிதானமா வரலாம். கடைகண்ணிக்கும் நாம சேர்ந்தே போவோமா..?  '..கண்ணில் ஆசை..


" வீட்டு வேலை' ..அவள் இழுக்க..


" இருக்கறது நாம ரெண்டு பேர்..சிம்ப்பிளா எதாவது செய்..முடிஞ்சவரை சேர்ந்து கடைக்கு போவோம், கோயிலுக்கு போவோம்..எனக்கும் தனியாவே வெளில போய் போய்..அலுப்பா இருக்கும்மா..'..


கண்ணில் நீர் பொசுக்கென்று வர..பதிலேதும் சொல்லாமால் படுக்கச் சென்றவள்..


காலையில் காஃபி குடித்த கையோடு..அவர் காய்ப்பையை எடுக்க..

" இரண்டே நிமிஷம்..நானும் கிளம்பிடறேன்'..


காந்திமதி..தான்..ரெடி ..


இத்தனை வருஷங்களில்...முதன்முதலாக அவருடன் வாக்கிங்கிற்கு வந்தாள்.


" இதுதான் என் வைஃப்..' 

பெருமையாக அவளை எல்லாரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் வெங்கடாசலம்.

No comments: