Thursday, June 17, 2021

குட்டிக்கதை

 #Unlock_1.0

#குட்டிக்கதை

"ஏங்க..அடுத்த திங்கள் முதல் வேலைக்கு வர ஆரம்பிக்கணும்னு மெயில் வந்திருக்கு..'

 மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்த கோபி குட்டியின் தலையை வருடியபடி கவலையில் ஆழ்ந்தாள் சரயு.

 

" எப்படி இருந்தாலும் வேலைக்கு போய்த் தானே ஆகணும்ப்பா..இப்படி வீட்லயே உட்கார்ந்து இருக்க முடியுமா?'

அவள் கணவன் க்ருஷ்.


"இல்லங்க..இந்த மூணு மாசமா வீட்லயே இருந்திட்டேனா..இவன் இப்ப என்னை விடவே மாட்டேங்கிறான்..எல்லாம் நானே செஞ்சு செஞ்சு பழகிட்டான்ங்க..இப்போ பழையபடி  விட்டுட்டு போனால்..உடம்புக்கு எதுனாச்சும் வந்துடுமோனு பயமா இருக்கு'..

ஒரு அம்மாவின் கவலையில் சரயு..


உள்ளிருந்து இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார் பாக்கியம்..

" நான் தான் இருக்கேன்ல..ஒரு ரெண்டு நாள்ள சரியாகிடுவான்' என்றாள்.


சரயு ஒரு பெரிய மாலில் பில்லிங் செக்‌ஷனில் வேலை பார்க்கிறாள்.

காலையில் கிளம்பினால் ராத்திரி ஆகிடும் வீட் வந்து சேர.அவள் கணவன் கிருஷ்...மெடிக்கல் ஷாப் வைத்து இருக்கிறான்.

அவ்வப்போது வீட்டுக்கு வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போவான்.


அவர்கள் உலகமே கோபிதான்.


நான் ஒரு ஐடியா சொல்றேன் ஆரம்பித்தான் க்ருஷ்..


" நாளையிலேர்ந்து நீ என்ன செய்வியாம்..சும்மா பையைத் தூக்கிட்டு அவனுக்கு டாட்டா காட்டிட்டு வெளியே போற மாதிரி போ.. 

எப்படியாவது இந்த ஒரு வாரத்துக்குள்ள அவனை ட்ரெயின் பண்ணிடுவோம்" சமாதானப் படுத்தினான்.

'ஆனால்..மாஸ்க் போட்டுக்ககணும் கண்டிப்பா' என்று சொல்லி கண்ணடித்தான்.


அடுத்த நாள் காலை..


"கோபி..செல்லம்..அம்மா டாடா போய்ட்டு இதோ வந்துடுவேனாம்..சமத்தா நீ இருப்பியாம்'

சரயு சொல்லிக் கொண்டே

ஹேண்ட் பேக்கை மாட்டிக கொண்டாள்..


"டாடா...அம்மா ..டாடா.." அவள் கையசைக்க..


 கோபி குட்டி வேக வேகமாக அவளோட வெளியே கிளம்ப  தாவினான்.

 

 பாவம்..அவனுந்தான் வெளியே போய் எவ்வளவு நாளாச்சு..ஆனால் குழந்தைகளும் பெரியவர்களும் வெளியே தலை காட்டக் கூடாது என்ற தடையை மீற முடியாதே..


"அவனும் என்  கூட வரணுமாம் பாருங்க.".சிரித்தபடியே சரயு..


" நீ பாட்டி  கிட்ட கொஞ்ச நேரம்.இருப்பியாம்..சரியா..?என்று மழலையில் கொஞ்சினாள்.


ஒவ்வொரு நாளும் வெளியே இருக்கும் நேரத்தை அதிகரித்தாள்.

கிளம்பும் முன்னமே அவனுக்கு கொஞ்சம் வயிற்றை ரொப்பினாள். பக்கத்தில் அவனுக்கு பிடித்த விளையாட்டு சாமானெல்லாம் பரத்தி வைத்தாள்.


" அம்மா..அவன் மேல ஒரு கண் வெச்சுக்கோங்க' என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு கிளம்புவாள் சரயு..


' இது ஒண்ணுதுக்கே இந்தப் பாடா?


பாக்கியம் மனசுக்குள்ளே சிரித்துக் கொள்வாள்..


சரயு வெளியே இருந்து வருவது தான் தாமதம்..

இத்தனை நேரம் அவளைக் காணாத ஏக்கத்தில்  அவளை விடவே மாட்டேன்னு ஒரே அடம் பிடிப்பான் கோபி..


இப்போது ..கொஞ்சம்.கொஞ்சம் மாமியாரிடம் செல்ல ஆரம்பித்திருக்கிறான்


ஆச்சு..எதிர்ப்பார்த்த திங்கட் கிழமை வந்தது....

க்ருஷ் காலையிலேயே போய் விட்டான்..


சரயுவும் ..வேலைக்கு கிளம்பி விட்டாள்..

"பத்திரமா பார்த்துக்கோங்கம்மா.. எதுவானாலும் ஃபோன் பண்ணுங்க". சரயு சொல்லிக் கொண்டே புறப்ப்ட்டாள்.

மனசெல்லாம் வீட்டிலேயே இருந்தது..


அடிக்கடி வீட்டுக்கு ஃபோன் செய்து கேட்டுக் கொண்டே இருந்தாள்..


அப்பாடா..ஒரு வழியா வேலை முடிஞ்சு கிளம்பினாள்..


" அம்மா..கோபியை உள்ளேயே வெச்சிருங்க..நான் குளிச்சுட்டு சானிடைஸர் எல்லாம் போட்டுட்டு வர வரைக்கும் என்னை பார்க்க வேண்டாம் அவன்'..


பூனை போல வீட்டுக்குள் நுழைந்து சுத்தம் செய்து ஹாலுக்கு வந்த போது..


ஒரே ஓட்டமாக வந்து அவள் மேல் ஏறி துகைத்து கொஞ்சி..மடியில் படுத்துக் கொண்டு ..அவள் முகத்தையே பார்த்தான் கோபி.


' பாட்டி கிட்ட சமத்தா இருந்தியா ..? Good boy..'

அவள் தன்னோட செல்ல நாய்க்குட்டி கோபியை கொஞ்ச..


 'சீக்கிரமே இவனோட விளையாட ஒரு கேசவ் பொறக்கணும் ...கிருஷ்ணா.. கண் திறப்பா'.🙏🙏.மனதுக்குள் நினைத்தபடி..

 தோசை தட்டை நீட்டினாள்  பாக்கியம்.

No comments: