Thursday, June 17, 2021

குட்டிக்கதை

 #கை_கொடுக்கும்_கை

#குட்டிக்கதை.


"அம்மா..bye..'

"ஆல் த பெஸ்ட் கண்ணா..சர்டிஃபிகேட்ஸ், ஐடி கார்ட், காலேஜ் லெட்டர் எல்லாம் கரெக்டா வெச்சிருக்கியா...தைரியமா ஹேண்டில் பண்ணு அவசரப்படாமல்,தெளிவா பதில் சொல்லு..' அம்மா புவனா அட்வைஸ் அடுக்கிக் கொண்டே போக..

"ஒகே..ஒகே..வேண்டிக்கோ சாமி கிட்ட..'

பறந்து விட்டாள்..மீரா.


மீரா..கல்லூரி மாணவி.

கேம்ப்பஸ் இண்டர்வியூ வில் இன்று அவளுடைய ட்ரீம் கம்பெனியிலிருந்து வருகிறார்கள்..

வாசலுக்கு வந்தவள்.


"ஆட்டோ..ஆட்டோ..'

எவ்வளவு கை காட்டியும் ஒருத்தரும் நிற்காமல் போகும் அந்தக் காலை வேளை ட்ராஃபிக்.

"சே..இன்னிக்குனு ..ஓலா..ஊபர் யாருமே அக்ஸ்ப்ட் பண்ண மாட்டேன்கிறாங்களே..'

பரபரப்பில் இருக்கும்போது..

' மேடம் எங்கே போகணும்?'..ஆட்டோவந்து நின்றது..

இடத்தைச் சொன்னாள்.


'ஐயோ..நேரமாச்சே..டிரைவர் கொஞ்சம் சீக்கிரம் போகறீங்களா?..

"ட்ராஃபிக் பாருங்கம்மா..நான் என்ன செய்யட்டும்?..

டிரைவர் சொல்ல..

அவள் அவசரத்தை புரிந்து கொண்டவன் சந்து பொந்தில் எல்லாம் புகுந்து அந்த காலேஜ் வாசல் முன் நின்றான்.


காலேஜ் பையையும் ,சர்டிபிகேட் வைத்திருந்த ஃபோல்டரும்  எடுத்துக்கொண்டு காலை கீழே வைக்க..  'பட்'டென்று ஒரு சத்தம்.


 அவள் செருப்பு தான்..

 

 " ஐயோ ராமா இப்போ நா என்ன பண்ணுவேன்.. இன்டர்வியூக்கு வேற டைம் ஆகிவிட்டதே..'

  பரபரப்பில் ஒன்றும் புரியவில்லை .

  

" இன்னிக்கி போயி இப்படி செருப்பு காலை வாரி விட்டதே'..பயமும் பதட்டமும் தொற்றிக் கொள்ள..


 சுற்று முற்றும் பார்த்தாள்.

  "இந்த பிஞ்ச செருப்பை சரி பண்ண இங்க யாரும் ஆள் இல்லையே.. என்ன செய்யறது?'

  

   பக்கத்தில் ஒரு ஸ்டேஷனரி கடை இருப்பதை கண்டாள் .

   அந்தக்கடை ..கல்லூரி மாணவர்களுக்கு குறைந்த விலையில் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்கும் கடை ஆகும்.

    அங்கே போய் கடைக்காரரிடம் ..

  "  அண்ணா...quickly fix  இருக்கா?'

      கேட்டு வாங்கினாள்.

      கடையில் கூட்டமில்லை..இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

   தன் பையை ஒரு கையில் வைத்துக்கொண்டு ..உட்கார இடம் இல்லாததால் காலில் இருக்கும் செருப்பை மற்றொரு கையில பிடித்துக்கொண்டு .

 தடுமாறிக் கொண்டிருந்தாள்.

    

      அங்கே கடையில் நின்று கொண்டிருந்த  இருந்த அந்த இரண்டு பேர்..

     "குடும்மா.'.  ..


"இல்ல சார் வேண்டாம்.. நானே செஞ்சுக்கறேன்' மறுத்தாள்.


'அட போம்மா .. யூனிஃபாரம் எல்லாம் கசங்கிடும். கொடும்மா..'


     இருவரில் ஒருவர் செருப்பை பிடித்துக்கொள்ள ..

     மற்றொருவர் அந்த செருப்பை சரி செய்ய முனைந்தார்.

      மீராவுக்கு ஒரே ஆச்சரியம்.

   அவர்கள் சில நொடிகளில் அவள் செருப்பை தற்காலிகமாக  உபயோகப்படுத்த  சரி செய்துவிட்டார்கள்.

   

" எவ்வளவு ரூபா  தரணும் அண்ணா..?'

கடைக்காரரிடம் ..மீரா கேட்க..


 ' போம்மா.. போய் நல்ல படி ..

 நல்ல வேலை தேடு நல்லா இரு ..

 ஆசீர்வதித்தார்.

 

 அங்கிருந்த மற்ற இருவரும் ..

 காலேஜ்ல இப்போ இண்டர்வியூ நடக்குதில்ல.. நல்லா செய்யுங்க ..வாழ்த்துக்கள் ' மனதார சொன்னார்கள்.

 

 

"ரொம்ப ரொம்ப நன்றிங்க..'.கண்ணில் அவளை அறியாமல் குபுக்கென்று வந்தது கண்ணீர்..


  மீராவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை இப்படிக்கூட முகம் தெரியாத ஒருவருக்கு அதுவும் முகம் சுளிக்காமல் தன் செருப்பை பிடித்து சரி செய்து கொடுத்தது அவளை என்னவோ செய்தது.

  

 காலேஜ் நுழைவாயில் வந்தது .

 ஏதோ ஒரு பாசிட்டிவ் எனர்ஜி அவளுக்குள் தோன்றியது .

 அவளுடைய முறை வந்தபோது அவளால் முடிந்தவரை எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னாள்.

 எல்லாரும் ரவுண்டும் முடிந்தது.

 ரிசல்ட் அறிவித்தனர் .

  மீராவின் பெயர் அதில் இருந்தது.

      போன் செய்து அம்மாவுக்கு சொன்னாள்.

       "லெட்ஸ் பார்ட்டி' நட்புகள்..கூப்பிட வேகமாக.

        அந்த ஸ்டேஷனரி கடைக்குள் நுழைந்தாள்.

        'அண்ணா ..ரொம்ப நன்றி.. எனக்கு வேலை கிடைச்சிருச்சு .

        நீங்க செஞ்ச உதவிய நான் மறக்க மாட்டேன் .

        இங்க வந்தாங்களே அவங்க கிட்ட சொல்லிடுங்க ..'

        சொல்லிவிட்டு கிளம்பினாள்.

        

 வீட்டுக்குப்போய் அம்மாவிடம் ...

 

 'எப்படிம்மா.. இப்படி கூட உதவி செய்வாங்களாம்மா?..

 நானா இருந்தா அது செஞ்சு இருப்பேனா?..அடுத்தவங்க செருப்பை தொட்டிருப்பேனா?..'

 

 

  அவள் அம்மா புவனா அர்த்தமுடன் சிரித்தாள்.

   "இப்படி ஏதோ கொஞ்சம் பேராவது இருக்கறதால் தான்.. மழை அப்பப்ப பெய்யறது.

   இதெல்லாம் நமக்கு ஒரு பாடம் மீரா..

   

    நமக்கு தெரிஞ்சவங்களுக்குத்தான் உதவி செய்யணும் இல்ல ..

    நமக்கு தெரியாதவங்களுக்கு செய்யும்போது கிடைக்கும் ஒரு மனசு திருப்தி இருக்கு பாரேன் ..அது ரொம்ப வித்தியாசமான அனுபவம்.

    

    அதனால நம்ம எப்பவுமே இந்த மாதிரி மத்தவங்களுக்கு உதவி பண்ணுனு  கடவுள்  காட்டிக் கொடுக்கும் சான்ஸை விட்டு  விடக்கூடாது..'..

    

 "போதும்மா ..உன் அட்வைஸ் "என்று அலுத்துக் கொள்பவள் இன்று 

 "ஐ லவ் யூ மா '..சொன்னபடி தன் ரூமுக்குள் சென்றாள்..

No comments: