Friday, October 6, 2023

Madhyamar-father's day

 #தந்தையர்தினம்

அப்பாவும் நானும்..


வெளியே போய்விட்டு வந்து விட்டெறியும் ஸ்கூட்டி சாவியும் வீட்டு சாவியும் மீண்டும் அதற்கான தூக்கில் தொங்கும்.

படித்து விரிச்ச புத்தகம் சரியா அடுக்கப்படும்.

நான் வெளியே கிளம்பும் முன் வானிலை அறிக்கை படித்து குடை எடுத்துக்கோ என்று நீட்டும் கை.

'குடை எங்கே ? ' வெளியேயிருந்து வந்ததும் தேடும் கண்கள்.

'தலையை துடைச்சுக்கோ' துவாலையை ரெடியா நீட்டும் கைகள். 

மத்தியானம் கொஞ்சம் கண் அயர்ந்தால்..ஜுரமா என்று தொட்டுப் பார்க்கும் வாத்ஸல்யம்.

'அம்மா பண்ற கூட்டு பண்றியா? கேட்கும் போது அவர் இழப்பின் காயம்.

'ஒரே ஒரு அப்பளம் சுட்டுத் தரியா? கேட்கும் அந்த கண்கள்.


அப்பா..live the present நு நான் லெக்சர் அடிக்க..

கொஞ்சம் past க்கும் போவேன் அவ்வப்போது.

இப்படியும் இருந்தோம்..இருக்கிறோம் இன்னும்.


மோட்டார் ரிப்பேரா..

த்ண்ணீர் ஊற்றி அவர் air lock சரிபண்ண..

தண்ணீர் வருதானு மொட்டை மாடியில் நான் பார்ப்பேன்.


TV ல கோடு கோடாய் வரும்..

திருப்பிச் சரி செய்வார் ஆண்ட்டெனாவை..

இன்னும் கொஞ்சம் திருப்பு..தெளிவா இல்லையென்பேன்.


சைக்கிள் துடைத்தால்..

துணியோடும் எண்ணெய்யோடும்

துணையாய் இருப்பேன்..


புதிதாய் செடி வைத்தால்..

அழகாய் அவர் குழி தோண்ட

அதில் உரமும் நான் இடுவேன்.


பரணியில் சாமான் எடுத்தாலோ

படுகெட்டியாய் ஏணியைப் பிடித்திடுவேன்.


ட்யூப் லைட் மாற்றயிலே

டார்ச்சாய் நான் இருப்பேன்


இரண்டு சக்கர வாகனத்தில்

இருவரும் வலம் வந்தோம்..

அன்று கற்றது

இன்றும் கைக்கொடுக்குது.


பழுதென்றவுடன் பதறாமல்

பார்ப்போம் ஒருகையென்று

மராமத்து வேலையெல்லாம்

மகிழ்ச்சியாய் செய்வேனிங்கே


மழையும் ரசித்தோம்..

மாட்சும் ரசித்தோம்.

எதிரணி அடித்தாலோ

எகிறிடும் இவர் ரத்த அழுத்தம்

இந்தியா விளையாடையிலே

இருப்புக் கொள்ளாமல் தவிப்பு.


எண்பதை தாண்டினாலும்

இளமை திரும்பும் இவருக்கு

இந்தியா- பாக் மாட்ச் என்றாலே..


arguments இருந்தாலும் அதில் மேலோங்கி நிற்பது அன்பு ஒன்றே.


இன்னொரு கொசுறு தகவல். 

என் வூட்டுக்காரரையும் நான் 'அப்பா'னு தான் கூப்பிடுவேன். 

எல்லாப் பெண்களுக்குமே தன் அப்பா மாதிரி வாழ்க்கைத் துணை கிடைக்கணும்னு ஆசை உண்டு.

பொறுமை, எளிமை எல்லாம் சேர்ந்த என் பெண்களின் அப்பா..

எனக்கு என் இரண்டு பெண்களோடு அப்பாவையும் சேர்த்து மூன்று குழந்தை என்றால்..

என் கணவருக்கும் அதே தான். 

என் ரெண்டு பெண்களோடு சேர்த்து நானும் ஒரு வளர்ந்த குழந்தை.

எனக்கு வாழ்வைத் தந்த, என் வாழ்வில் வந்த அப்பாக்களுக்கு அன்பைத் தவிர தர வேறொன்றுமில்லை் என்னிடம்.

happy father's day

No comments: