Friday, October 6, 2023

Madhyamar- காவேரி

 என்ன செய்யப் போகிறோம்?


'அடடே..பொழுது விடியப்போகுது எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்களே. எல்லாப் பக்கம்மும் சுத்தமா இருக்கா...ஒரு வருசம் ஓடிப் போச்சு...

அட..யாரது அங்கனே..புதுப் பவுனு பளபளனு..நம்ம பொன்னாத்தாவா.

ஆளே அடையாளம் தெரியாமா பெருத்து கிடக்காளே..

அதோ அவ கூட யாரு...செவந்தியா.. கூட யாரு..புது மாப்பிள்ள.. சரி சரி..தாலி பிரிச்சு கட்ட வந்திருக்காக போல இருக்கு..

என் கால்ல விழுந்து கும்பிட்டப்போ..அடுத்த வருசம்..கையில் ஒண்ணு கூட கூட்டியானேன்..வெக்கபட்டு போச்சு... 

அதுக்குள்ள ஒரு பரிச்சயமான குரல்..என்ன ஆத்தா..என்னை மறந்துட்டியா..போன தபா வர முடியாம போச்சு..உடம்புக்கு முடியாம கிடந்தேன்..இந்த தடம் எப்படியும் உன்னை பார்த்தே ஆவணும்னு புள்ளைய கூட்டிகிட்டு வந்தேன்.


 ஆத்தா..அடுத்த முறை இந்த கட்டை இருக்குமோ..இருக்காதோ..புலம்பியபடி நாச்சியம்மை..

எல்லாம் நல்லா இருப்பே போ..சீக்கிரம் மவனுக்கு ஒரு கால் கட்டு போடு...ராசா..கால்ல விழுந்து கும்பிட்டுக்கப்பா...

அங்கிட்டும் இங்கிட்டும் குழந்தங்கள  ஓட.. துரத்தியபடி மாடசாமி.. .. .


 எலேய்..நில்லுங்கடா...கூட்டத்தில எங்கினாச்சும் தொலஞ்சு போயிறப்போறீக...அத்தை ,மாமா எங்கேடா..சாமிகும்பிட்டு ..பொறவு..கொண்டு வந்த சோத்தை தின்னுட்டு..ஊரப் பாக்க போவனுமப்பா..சோலி இருக்கில்ல..

எப்பவுமே இவனுக்கு அவசரந்தான்.. இருப்பா..ஒரு நா..கொஞ்சம் என் கூட இருந்திட்டு போயேன் ...காதில் விழவில்லை யாருக்கும்.


ஈ எறும்பு க்கு கூட இடமில்லாம கூட்டம்..

வெளக்கு ஏத்தி, .பூ,தாம்பூலம் ,கலந்த சோறு எல்லாம் வச்சு படயலாச்சு..

. சனம் பூரா ஒத்துமையா..வந்துட்டு போறத பார்க்க ..இன்னொரு நாள் இருந்துட்டு போமாட்டாங்களானு ஏக்கமாச்சு..

பொழுது சாய ஆரம்பிக்க... அவுங்கவுங்க..ஊருக்கு பஸ் ஏறி புறபட்டாச்சு..

ஒரே வெறிச்சோடி போச்சு..


என்னை சுத்தி இப்பொ இருக்கறது...இவுக எல்லாம் விட்டறிஞ்சிட்டு போன ...குப்பை தான்

எம்புட்டு சுத்தமா காலைல  இருந்த இந்த இடம்..

கும்பிடத்தானே வந்தீக..

என்னை..இப்படி குப்பை மேடாக்கிட்டு போக ..எப்படி மனசு வந்துச்சு..


 குமுறலில்..காவிரித்தாய்...

ஆடிப் பெருக்கு சந்தோஷம் எல்லாம் அடியோடு மறைந்து ..விசும்பியபடி..


இது நான் எழுத முயற்சித்த கதை.

(Disclaimer...just used the names that came to my mind..)


இன்னிக்கு உலக சுற்றுச்சூழல் தினம். 


என்ன செய்தோம்? என்ன செய்யப்போகிறோம்?

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை..போகுமிடமெல்லாம் குப்பை மேடாக்கி வருவேன்னு சத்திய பிரமாணம் செய்த மாதிரி ஏன் நடக்கிறோம். 


morning walk கை வீசி நடக்க முடிகிறதா?.ஒரு கை மூக்கை மூட வேண்டியிருக்கே.

காரில் வந்து கண்டுக்காமல் குப்பை பையை ஓரமா வீசி எறியும் மக்கள்..


பானி பூரி வண்டிகள் ..பக்கத்தில் போராய் குவிந்த குப்பைகள்


ஆங்காங்கே வீசி எறியப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள்..ஒரு சின்ன தூறலுக்கே வெள்ளக் காடாக மாறும் தெருக்கள்..


அமெரிக்கனை பார்..ஐரோப்பியனை பாருனு இன்னும் எத்தனை நாள் சொல்லப்போறோம்.


பனி மலைகள் எல்லாம் ப்ளாஸ்டிக் மலையாகிடுமோனு பயம்..

நதிகளெல்லாம்..நஞ்சாய் மாறிடுமோடுனு பெரிய கவலை..


உலகம் பிறந்தது எனக்காக..

ஓடும் நதிகளும் எனக்காக..

மலர்கள் மலர்வது எனக்காக..

அன்னை மடியை விரித்தாள் எனக்காக..

பாடல் வரி எல்லாருக்கும் பிடிக்கும் . மடி விரித்த அன்னை..கண் முன்னே மடிவதைக் கண்டு எப்படி சும்மா இருக்கிறோம்?

ஒரு ப்ரதிக்ஞை எடுப்போம். மத்ய்மராய் நம் பொறுப்பு உணர்வோம். உணராதவருக்கு நம் நடத்தையால் முன்மாதிரியாய்  விளங்குவோம்.


குப்பைக்கு ஒரு big good bye சொல்லுவோம்.

சுந்தரமயமான சுற்றுசூழலுக்கு பட்டுக்கம்பளம் விரிப்போம்.


#உலக_சுற்றுச்சூழல்தினம்.

No comments: