Friday, October 6, 2023

Madhyamar-home

 home ..sweet home


வீடு..அதுவும் வாடகை வீடு..

நுழையும் போது நூறு குற்றம் சொன்னாலும் , வருடம் செல்லச் செல்ல ஒரு நட்பும் அன்பும் அந்த வீட்டோடு உருவாகும்.


ஒவ்வொரு முறையும் ட்ரான்ஸ்ஃபர் ஆகி ,வேறு ஊருக்கு செல்லும்போது..கட்டிக் காத்து களித்திருந்த வீட்டை விட்டு வரும் போது மனசு ரொம்பவே கஷ்டப்படும். 


அந்த வீட்டு மரம் செடி கொடி , பாசமாய் வரும் பறவைகள், சுத்தி சுத்தி வரும் பூனைக்குட்டி  , குரல் கொடுத்ததும் எட்டிப் பார்க்கும் பக்கத்து வீட்டு பாட்டி..

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


சாவிகள் கை மாறும். குடியிருந்தவருக்கு தெரிந்த பல விஷயம் வீட்டுச் சொந்தக் காரருக்கு கூட பல சமயம் தெரியாது.


எனக்கு மிகவும் பிடித்த தேஹ்ராடூன் வீட்டை காலி செய்தபோது எங்கள் வீட்டுச் சொந்தக்காரரிடம் அவர் வீட்டைப் பற்றி பல தகவல்கள் சொன்னேன். 


பெரிய பேர் தெரியாத மரம் என்று கண்பித்தார் நான் குடியேறியபோது..

கொஞ்ச நாளில் தோட்ட வேலை செய்பவர் இரண்டு மூன்று ருத்திராக்‌ஷம் கொண்டு வந்து கொடுத்தார் அந்த மரத்திலிருந்து.


குப்பையாக இருந்த பின் பக்கத்தை கிச்சன் கார்டனாக மாற்றி காரட், பட்டாணி, முள்ளங்கி , உருளை,வெங்காயம் என்று ஏகபோக  விளைச்சல் நிலமாக்கினேன்.


மூட்டை மூட்டையாக கொட்டும் மாமரம், சப்பு கொட்டும் லிட்சி மரம், வாழை மரம் இதெல்லாம் யார் சொன்னது மரங்கள் என்று.. என்னோடு பேசி சிரித்து தலையாட்டி என்னோட குழந்தைகள் மாதிரி ..என்னையும் குழந்தையாக்கி சந்தோஷம் தந்த செல்வங்கள்.


இருக்கிற இந்த வாடகை வீட்டை இப்படி எதுக்கு துடைத்து பெருக்கி பளபளப்பாக்கி ..நீ என்ன பெரிய மெடல் வாங்கப்போறியானு வரும் வலதுகரமெல்லாம் ஏசுவார் என்னை..


 வாடகை வீடு..

கான்க்ரீட் காட்டில் இருந்தாலும் ஆசையாய் வாழ்ந்து பார்த்தால் அந்த அன்னியோன்னியம் புரியும்.


வீட்டுச் சொந்தக்காரருக்கு நான் சொன்ன விஷயம் இதோ:


விதையே இருக்காது..

 காயே கனியாய் இனிக்கும்..

நான் வெச்ச கொய்யா மரம்..


இது என் பொண்ணு

நட்ட மாமரம்..

மல்கோவா ...சுவையோ சுவை..

மண்ணு நல்ல மண்ணு இது..


அளவில சிறிசுதானாலும்

அன்னாசிப் பழம்..

அருமையா இருக்கும்..


வாழை இலைக்கு..

வெளியே போறதே இல்லை


இந்த மரக் கிளை இருக்கே

மங்களத்தின் அடையாளம்..


இந்தப் பூச்செடி ..

புது வகையாக்கும்..

பார்க்கவே கொள்ளை அழகு..


பக்கத்து வீடு நல்லவங்க..

பக்க துணையா இருப்பாங்க..


சுவற்றில் தொங்கும் படம்..

சின்னப் பெண் வரைஞ்சது..


அணில் புறா மைனா எல்லாம்..

அடிக்கடி வந்து விளையாடும்..


தண்ணீர் வருகை பார்த்து

தவறாமல் மோட்டார் போடணும்..

இந்த குழாய் மட்டும்..

கொஞ்சம் தண்ணீ கம்மி வரும்..


திருட்டு பயமே இல்லையிங்கே..

தைரியமா இருக்கலாம்..


ராசியான வீடுங்க..

வரிசையாய்..விளக்கங்கள்


வீட்டுச் சாவியை

வீட்டுச் சொந்தக்காரர் கையில்

் கவலையுடன் கொடுத்தபடி.

பல ஆண்டாய்...

குடியிருந்த நான்..😌


வாடகை வீடானாலும்

வாழ்ந்த விட்டை

விட்டு வரும் வலி..

வலி ....வலி்தான்...

No comments: