Friday, October 6, 2023

Madhyamar- பாதித்த படைப்பு

 #என்னைபாதித்தபடைப்பு


' என்ன இன்னிக்கு உங்க அம்மா வரலை.

 வீட்ல விசேஷம். நிறைய பாத்திரம் வுழும். இருந்து எல்லாத்தையும் தேச்சு துடைச்சு குடுத்துட்டு போய்டு'  எசமானியம்மாள் சொன்னதற்கு தலையாட்டி ஒவ்வொரு பாத்திரமா பக்கெட்டுக்குள் ரொப்பிய தண்ணியில் சர்வ ஜாக்கிரதையா வேலையை செய்ய ஆரம்பித்தாள் முனியம்மாவின் பெண் அழகி.


ஒவ்வொரு பாத்திரத்திலும் சரியாக ஒட்ட வழிக்கப்படாமல் காயும் குழம்பும் ரசமும் மோரும். ..

'முதல்ல ஒரு தடவை எல்லாத்தையும் கழுவிட்டு அப்பறமா சபீனா போட்டு தேய்.' 

எசமானியின் குரல் ஆணை.


ஒவ்வொரு அண்டாவும் குண்டாவும் அலம்பிய பின் கையில் வீசிய வாசனை ..இதுவரை அவள் அறிந்திராத சமையல் வாசனை.


இப்படி கூட சாப்பாடு இருக்கா என்ற வியப்பிலேயே வேலை செய்தாள் அழகி.


குழி குழியாக தட்டுகள் விழ ..அதன் மேல சரியாக எடுக்கப்படாமல் ஒட்டியிருக்கும் இட்லி துகள்கள். என்ன வாசனை..


இந்த தூளே இத்தனை பஞ்சாட்டாம் இருக்கே..அப்ப அந்த முழு இட்லி எப்படி சுவையா இருக்கும். மனசுக்குள் மல்லிப்பூ இட்லி சாப்பிடும் கனவுடன் அழகி.


' வேலை முடிச்சிட்டேன்மா' 

இரு இரு சாப்பாடு தரேன் ..எசமானியின் அன்புக் கட்டளை.

அலுமினிய டப்பாவில் எதோ அடைத்து தந்தாள்.


வீட்டுக்கு ஓடிய அழகி ' அம்மா இங்கே வாயேன் ..சாப்பாடு கொண்டாந்திருக்கேன்'


டப்பாவைத் திறந்த போது ..உள்ளிருந்து எட்டிப் பார்த்தது பழைய சோறும் பச்சை மிளகாயும்.


'அம்மா..நம்ம எப்போ மா இட்லியெல்லாம் சாப்பிடுவோம். '

இப்படி முடியும் கதை..


இதைப் படித்த போது பத்து வயதிருக்கும் எனக்கு. விகடனோ குமுதத்திலோ வந்த கதை.

எழுதியது யார் என்று நினைவில்லை.


வாழ்க்கையில் சங்கல்பம் செய்ய வைத்த கதை அந்த கதாபாத்திரம் அழகி. 

எங்கள் வீட்டுக்கு வரும் வலது கரங்கள் என்றுமே இப்படி ஏமாந்ததில்லை.

No comments: