காலை நேர ராகமே..
கோயில் மணி யோசை..
குயில்களின் குக்கூ..
பூவெல்லாம் ..கேட்டுப்பார் என் விலை
என்று பெருமையில்..
மூட்டையிலிருந்து விடுதலை மூச்சு விட ..
உருண்டோடிய உருளையும் கோஸும்.
களை கட்டிய.. காலை மார்க்கெட்.
அருகம்புல்லும் அலோவேராவும்
அதிகாலைப் பானமாய்..பாண்டத்தில்
முளை கட்டிய பயறு
மும்முரமாய் வியாபாரம்.
ஓலாவும் ஊபரும்..ஒட்டமாய் ஓட்டம்.
கம்பெனி பஸ்ஸுக்கு காத்திருக்கும் கூட்டம்.
காண்ட்ராக்டர் வேலை தருவாரா என
கவலையுடன் தினக் கூலி ஆட்கள்.
ப்ராஜக்ட் ..PTA .
படு கவலையில் அம்மாக்கள்
வண்டியில் பசங்களை இறக்கிவிட்டு
வெயிட்டைக் குறைக்க.
ஜாகிங் போறேன்னு
ஜகா வாங்கும் அப்பாக்கள்
அம்பது ரூபாய்க்கு பூ வாங்கின பின்னும்
அடுத்த வீட்டு காம்பவுண்டிலிருந்து
அலாக்காய் பறிக்கும் செம்பருத்தி
அம்பாளுக்கு உகந்ததென்று
அசட்டுச் சிரிப்புடன் ..மாமி.
இதெல்லாம் எப்போதும் தானே..
இழுத்து நிறுத்தியது ஒரு காட்சி.
' அங்கே சரியா குப்பையை பெருக்குங்க'
வாக்கருடன்..வயது முதிர்ந்த பாட்டி
அவர் ஆணைப்படி ..
' சொல்லு வேற எங்க குப்பை இருக்குனு '
சுவற்றைப் பிடித்தபடி..வாசலை
சுத்தம் செய்த தாத்தா..
மனசும் உடம்பும் புத்துணர்வு பெற..
வீட்டுக்குள் நுழையும் போது..எதிர்த்த வீட்டு 90 வயது மாமா..பையுடன் வெளியே கிளம்பிண்டடிருந்தார்.
இது மாமி ட்யூட்டி ஆச்சே..என்ன நீங்க இன்னிக்கு என்றேன்.
'கண்ணே திறக்காமல் படுத்தபடி இருக்கா..அதான் நான் போய் பால் வாங்கப் போறேன் 'என்றார்.
கொஞ்ச நேரம் கழித்து அவர்களைப் பார்க்க போனேன்.
மாமா ஒரே புலம்பல் ..எதாவது சொல்றதை கேட்டால் தானே..அவ்வளவு பிடிவாதம்நு ..சொல்ல ஆரம்பிக்க..
மாமியோ..என்னப் பத்தி குத்தம் சொல்லலைனா உங்களுக்கு தூக்கம் வராதேனு வலியின் அவஸ்தையிலும் ..விவாதம்
.நான் சமைச்சு தரேன்நு மாமியிடம் சொல்லவும்..மாமாவுக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் லிஸ்ட் போட்டு..அவருக்கு ஒரு ரசமும் காரமில்லாமல் அவரைக் காய் கறியும் செஞ்சு கொடு என்று சொல்லிண்டிருந்த போது..
இந்தா..குடி..இஞ்சி கஷாயம்னு..ஒரு டம்ளர் கொண்டு வைத்தபடி மாமா..
ஒவ்வொரு விடியலும் ஒரு சேதி தரும்.
இன்று ஒரு சேதி எனக்கு கிடைத்தது..
உங்களுக்கு?
எத்தனை வாதம்..விவாதம்..விவாகம் பற்றி..
வாழ்க்கைப் பாடம்..கற்றுத் தரும் ஆசான் கள்..இவரன்றோ
No comments:
Post a Comment