வல்லமை தாராயோ..
மோட்டுவளையும் மாட்ச்சும் மாத்தி மாத்தி பார்க்கும் அப்பா..திடீரென்று நேத்திக்கு ' பக்கத்து கடைக்கு போய்ட்டு வரேன் ..லிஸ்ட் கொடு என்றார். விடுவேனா..ஒரு ஆள் வேலை செய்ய கிடைச்சால். ..
அவரெல்லாம் ரொம்ப systematic. ஒரு பேப்பர் எடுத்து பிள்ளையார் சுழி போட்டு தேதி போட்டு..உஸ் அப்பா..நான் அப்பறம் மறந்துடுவேன் என்று சொன்னதை கண்டுக்கவே இல்லை. எட்டு ஐட்டம் இருக்குப்பா..home delivery பண்ண சொல்லுங்கோ..நீங்க தூக்க வேண்டாம் என்றேன்.
கடைக்கு போய்ட்டு சைட்ல பேத்திக்கு கடலை மிட்டாயும் வாங்கி வீட்டுக்கு வந்தார்.
அவர் பொறுமையை சோதிச்சது..சாமான் வராமல்..நான் சரியாதானே சொன்னேன் அட்ரஸ் ..இன்னும் வரலையே..ஃபோன் வேணா பண்ணேன். ஒரே restless.
இந்த அபார்ட்மென்ட் வரும்போது கொண்டு வருவாம்ப்பானு நானும் சமாதானம் சொன்னபடி இருந்தேன்.
வந்தார் வந்தார் ..டெலிவரி பாய். தந்தார் தந்தார் சாமான் எல்லாம்.
உள்ளே எடுத்து வைக்கப் போனேன். ' இரு இரு ..எல்லாம் சரியா இருக்கானு செக் பண்றேன் அப்படின்னார். எப்பவும் தருபவர் தானேப் பா..why tension என்றேன்.
என் நேரம்..லிஸ்டில் 9 ஐட்டம்..என் கிட்ட 8 ஐட்டம். தோண்டி பார்த்ததில் ஒரு சந்திரிகா சோப் எக்ஸ்ட்ரா 25 ரூபாய்க்கு. கடையில் பில் பார்க்கலை.
நீ என்ன பண்ற காலம்பற கடை திறந்ததும் போய் அவன்கிட்ட சொல்லி 25 ரூபாய் வாங்கிண்டு வந்துடு. இனிமே நீயும் ஜாக்கிரதையா செக் பண்ணு. இன்னும் எவ்வளவு போச்சோ இப்படினு ஒரே புலம்பல்.
காலையில் எழுந்ததும் first reminder அதுதான்.
போனேன் கடைக்கு.நீங்க வாங்கினது தான்னு பில் போட்டவர் argue செய்ய..அப்பா எடுத்துண்டு போன லிஸ்ட்டை காண்பிச்சேன். இதுல இல்லையே..இப்பவாவது ஒத்துக்கறயா என்றேன். ' என்ன madam..இத்தனை வருஷமா வாங்கறீங்க ..ஒரு 25 ரூபாய்க்கு இப்படி பண்றீங்களே என்றார்.
ஒரு சின்ன க்ளாஸ் எடுக்க வேண்டியதாப் போச்சு அவருக்கு.
' என் அப்பா 82 வயசில தானே வந்து வாங்கணும்னு வந்தார். இப்போ இப்படி தப்பா போனால் தான் இதுக்கு கூட லாயக்கில்லையோனு சோர்ந்துடுவார்ப்பா..
அவரோட self confidence ம் போயிடும்..உன் மேல இருக்கும் confidence ம் போய்டும்.
பரவாயில்லையா..' என்று கேட்டேன்.
25 ரூபாயை திருப்பி கொடுத்து அந்த பில்லையும் சரி செய்து வாங்கி வந்து அப்பாகிட்ட காண்பித்தேன்.
ஒரு sigh of relief அவரிடம்.
அவர்கள் மன நிலையில் இருந்து யோசித்தேன்..இப்படித்தான் அவர்கள் மன ஒட்டம் இருக்குமோ..
தூக்க மருந்து தாலாட்டுமுன்
தூக்கிப் போடுமே இருமல்
என் லொக் லொக் சத்தம்
கொர் கொர் குறட்டைக்காரரையும்
கூப்பிட்டு எழுப்புமே..
தலைகாணி உயரமாகும்..
தலை விதி நொந்து..
தாரையாய் கண்ணீர்..
.
கோழிக் கூவும் நேரம்..
கண்ணும் சொக்கும் தூக்கம்..
எட்டு மணி ட்ரெயின் பிடித்து
எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து
ஓட்டமும் நடையுமாக..
ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..
ஓரமாய்..சின்ன நினைவாய்..
விழிப்பும் ஒரு வழியாய் வர..
வேகத்தில் இயங்கும் வீடு..
பெண்ணும் பேத்தியும்..
பேச்சா..சண்டையா..??
புரியாத புதிராய் நான் முழிக்க..
சூடாக் குடித்த காபி..
சுட சுட செய்தியுடன் பேப்பர்
வெது வெது நீரில் குளியல்..
வேண்டுதல் நாளின் இனிமைக்கு..
பசித்து புசித்த காலம்..
பழங்கதையான ஏக்கம்..
மாத்திரைகள் பாதி உணவாக..
மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..
ஒற்றை வரியில் பேசிய நானோ
ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!
வலிகள் தரும் வேதனை..
விடுதலை வேண்டி ப்ராத்தனை.
கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய
நிகழும் காலம் நீளமாய்த் தெரிய
வரப்போகும் விடியல்..
விரட்டுமென் சோதனையென
விழித்தபடி படுத்திருக்கேன்..
விடிய இன்னும் நேரம் இருக்கே..
புரண்டு படுக்கையிலே..
புலப்பட்டத்து ஓர் ஒளி..
' நீ அவனில்லை..
நினைத்தை முடித்த..
நீ..அவனில்லை..'
நொடியில் மறைந்தது..
நிமிண்டிய அவ்வொளி..!!
சூரிய கிரணமும்..எனைச்
சுறுசுறுப்பாக்க..
"பழக்கம் எனக்குமுண்டு..
பழம் காய் வாங்க..
பக்கத்து கடைதானே..
பத்திரமாய் போய்வருவேன்"..
விக்கித்து நின்றாள் பெண்..
மோட்டுவளை பார்த்தவன்..
மீண்டெழுந்தேன்...
மீதமுள்ள நாட்களை..
மகிழ்ச்சியாய் கழிக்கும்..
மனத் திடத்துடனே..
வயோதிகம்..ஒரு வியாதியல்ல..மருந்து மாத்திரையுடன் தெம்பும் தன்னம்பிக்கை யும் தருவோம்.
No comments:
Post a Comment