#சுதந்திரதின_ஸ்பெஷல்
ஆரஞ்சு மிட்டாய் to Adidas bag.
வீழ்ச்சி வீழ்ச்சி என்ற வார்த்தை காதில் விழுந்தபடி இருக்கும்போது வளர்ச்சி..அதுவும் ஒரு சிறு வளர்ச்சி பற்றி எழுத வாய்ப்பு கொடுத்த அட்மினுக்கு வந்தனம்.
80 களில் ..ஊரை விட்டு வெளியே ஒரு ப்ளாட்.. அதில் சின்னதா ஒரு வீடு. பஸ் ஸ்டாண்டிலிருந்து தெரியும் வீடு.
இரவானால் வோல்டேஜ் குறைந்து அழுது வடியும் விளக்குகள்.
சரக் சரக் செருப்பு சத்தம் .. கிழிக்கும் நிசப்தம்.
சின்ன காலனிக்குள் ஒரு மைதானம். மழைக்காலத்தில் புதர் மண்டி இருக்கும்.
ஒரே ஒரு ஊஞ்சல் ( பேய் படத்தில் வருமே) ஆடியபடி இருக்கும்.
குப்பை கொட்டுவோர்க்கு வசதியான இடம்.
சாயங்கால நேரம் புதுசாய் புகைபிடிக்க கற்றுக் கொண்ட road side ரோமியோக்களின் புகலிடம்.
அவர்களிடமிருந்து வெளிவரும் புகையுடன் ..பேச்சும்..கேலியும்.
காத்திருப்போம் காலனி மக்கள் சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும்.
பளிச் விளக்குகள், எல்லார் வீட்டிலிருந்தும் கொண்டு வரப்படும் நாற்காலிகள், மேசைகள்.
சட்டையில் குத்த கொடி ரெடியாகும். பாட்டு ப்ராக்டிஸ் நடக்கும்.பூக்கள் அலங்காரம் , கோலம் எல்லாம் களை கட்டும்.
அந்தந்த வருஷம் பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியவருக்கு பரிசும் உண்டு.
பேனா வேண்டுமா..பை வேண்டுமா என்று செக்ரட்டரி மாமா கேட்க..கனவோடு வாய் பிளந்து ..ஜிப் வைத்து மழையில் நனையாத adidas bag வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். வரிசையில் நின்று மிட்டாய் வாங்கித் தின்று..
இரண்டு நாள் காலனியே ஜக ஜோதியாய்.
எல்லா வீட்டிலும் தன் வீட்டு விசேஷம் போல சின்ன சின்ன வேலைகள் செய்து கொடுப்போம்.
எல்லாம் முடியும்..மீண்டும் அதே இருள் சூழும்.
இப்படியே சில வருடம் போக..
ரிடையர் ஆகி வீட்டில் உட்கார ஆரம்பித்த சில அரசு ஊழியர்கள்.. ' ஏதாவது செய்வோம் நல்லது இந்தக் காலனிக்கு ' என்று நாயகன் ஸ்டைலில் களத்தில் இறங்கினர். எங்கே தட்டினால் கதவும் திறக்கும் உதவி கிடைக்கும் என்று அரசுப் பணிகளில் இருந்த நேர்மையான அனுபவம் கைக் கொடுக்க..
புல்லும் புதரும்..பதர்களும் இருந்த மைதானம் புதுசாக புதுப் பொலிவு பெற ஆரம்பித்தது.
காம்பவுண்ட் சுவர்களில் திருக்குறளும் விவேகானந்தரின் வார்த்தைகளும் வண்ணமயமாக எண்ணத்தை தூண்ட எழுதப்பட..
ஒற்றை ஊஞ்சல் போய்.. ஊஞ்சல்களும் ,சறுக்கு மரமும் கலர் கலராக..கண்ணைக் கவர..
சின்ன சின்ன பாத்திகளில் பூக்கள் மலர..
காலாற நடக்க அழகான நடை பாதையும், அசதி போக்க அமரும் இருக்கைகள் அமைக்கப்பட
குழந்தைகள் ஒரு பக்கம் விளையாட..பேச்சும் நடையுமாய் பெற்றோரும் ,பேரன் பேத்திகளுடன் தாத்தா பாட்டிகளும்..
இப்பொழுது எல்லா நாளும் சுதந்திர தினம் தான்.
சுதந்திரமாய் கால் வீசி நடக்க..சுதந்திரமாய் குட்டீஸ் விளையாட, சுதந்திரமாய் அரட்டை அடிக்க..உருவாகி இன்று ஒரு மாடல் பூங்காவாக திகழும் எங்கள் காலனிப் பூங்கா.
ஓடி ஓடி இதற்காக உழைத்த என் அப்பா..( எப்பவும் என்ன தெரு முனையில் கூடிக் கூடிப் பேச்சு என்று அம்மா ஏசலையும் மீறி)
தலைவரே..எங்க வீட்டில தண்ணீ வரலை..குப்பை எடுத்து போகலை..இப்படி சின்ன சின்ன வேலையிலிருந்து மனம் கோணாமல் அப்பாவும் அவர் நண்பர்களும் செய்த ப்ராஜக்ட்.
வாலிபத்தில் வருமானத்துக்காக ஓடி..
வயது முதிர்ந்த போது..ஒரு சின்ன வளர்ச்சிக்காக உழைத்த இவர்கள் ..
"என்னால் என்ன உபயோகம்?" வயது காரணமாக அப்பா விரக்தியில் பேசும்போது..
நான் உபயோகிக்கும் ஒரு எனர்ஜி அஸ்திரம்..இந்த பார்க்கின் ஃபோட்டோ.
இன்று ஆரஞ்சு மிட்டாய் மறைந்து mothi choor லட்டுவும் மிக்ஸர் பாக்கெட்டும் ..
adidas bag மறைந்து அழகாய் certificate ..
எப்போது சென்றாலும் என் வீட்டுத் திண்ணையில் நின்றபடி..இந்த வளர்ச்சியை ரசிக்கும் ஒரு சாதாரண நான்.
ஜெய் ஹிந்த்
No comments:
Post a Comment