Friday, October 6, 2023

Madhyamar- பயணம்

 பயணம்..ஒரு பாடம்.


தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ப்ளாட்ஃபார்மில் ் வந்து நின்னதும், தடக் தடக் சத்ததோடு என் லப் டப்பும் ஜாஸ்தியாகும்.

.இருக்கிற மூட்டை முடிச்சை இடம் பார்த்து உள்ளே தள்ளணுமே..பகவானே என் பெர்த்ல வர யாரும் சாமானே கொண்டு வரக்கூடாதுனு அராஜகமா ஒரு வேண்டுதல் வேற. அதுவும் கண்டிப்பா இந்த டிரங்க் 📦 பெட்டியும் ,  சுருட்டிய bed உடன் யாரும் என் பர்த் கிட்ட வரக்கூடாதேனு ஒரே கவலை😟.


 அவர்கள் பெட்டி வைத்து விட்டால் நான் என் குட்டி வாலுடன் ஹை ஜம்ப் ,hurdles எல்லாம் விளையாடியபடி தான் ஒவ்வொரு முறை பாத் ரூமோ கை அலம்பவோ போக முடியும். பல சமயம் கடவுள் என்னை பிரார்த்தனை கேட்காமல், விறைத்த உடுப்பும், வெறுமைப் பார்வையும் உள்ள அவர்கள் தான் என் இடத்தருகில் வருவார்கள். பாதி நேரம் சீட்டிலும் இருக்க மாட்டார்கள். தூங்கவும் மாட்டார்கள். பிரிவு, ஏக்கம் கடமை என்பதின் எல்லா expression ..அவர்கள் முகத்தில் எழுதி இருக்கும். அவர்களைப் பார்த்தால் பாவமாக இருந்தாலும் என் கவலையெல்லாம் டிரங்க் பெட்டில கிழிச்சுக்காமல் காலை ஒழுங்கா வெச்சு போகணுமேன்னு தான். ஒரு maturity கம்மியா இருந்த பொழுதுகள் அவை.


புலம்பித் தள்ளும் எனக்கு என் வீட்டுக்காரர் சொல்லும் ஒரே பதில் 'உனக்கென்ன தெரியும் அவர்கள் கஷ்டம்'..


அடுத்து என் ரூட் மாறியது. கெளஹாத்தி எக்ஸ்பிரஸ். அங்கேயும் இதே கதைதான். என் பெட்டியில் கண்டிப்பா இரண்டு மூணு army jawans பயணம் செய்வார்கள். இப்போது கொஞ்சம் லேசா அறிவு வளர்ந்து ஐயோ பாவம் அவர்கள்..குடும்பத்தை எல்லாம் விட்டு இப்படி எங்கோ கண் காணாத தூரத்தில், கணினியோ தொலை பேசியோ எப்பவாவது வேலை செய்யும் ஒரு ரிமோட் பகுதிக்கு போறாளே பாவம்னு மனது அடித்துக் கொள்ளும். 

என் பொண்ணும் இவ வயசுதான் மேடம். அடுத்த தடவை பார்க்கும்போது நல்லா வளர்ந்திடுவா என்று கண்ணீர் நான் வெளியே கொட்டப் போறேனு அவரை பயமுறுத்தும். 

என் ஊர் Purulia ( west Bengal) ல் இறங்கி அவர்களைப் பற்றிய சிந்தனை கொஞ்ச நேரம் துரத்த எங்க கிராமத்துக்கு போய் சேர்வேன். 

'உனக்கென்ன தெரியும் அவர்கள் கஷ்டம்' என்பதின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.


அந்த முறை சிக்கிம் டார்ஜிலிங் போக முடிவாச்சு. மிக அழகான ஊர்.


 சிலிகுரிலேர்ந்து பயணம்.'Teesta ' நதி கை நீட்டி வரவேற்று அழைத்துச் செல்ல ரம்மியமான ஒரு சூழல். போகும் வழியில் ஒரு ரெஸ்டாரெண்டில்  potato fry உடன் கரப்பான்பூச்சியும் போட்டு எடுத்து வந்தார்கள். 

சிக்கிம்..எத்தனை அழகான ஊர். உள்ளே நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்டது ' idli dosa available' நு போர்டு மாட்டின ஹோட்டல். நாக்கைத் தொங்கப்போட்டு ஒரு வெட்டு . வீட்ட்ல சீந்தாத பண்டம்..தேவாமிர்தமா இருந்தது.


லோகல் டூருக்கு ஒரு இன்ஸ்பெக்டர்தான் 

🚗 டிரைவர்.அவர் இந்த சீசன் வரும்போது இரண்டு மூணு லகர்ம் பார்த்துட்டு அக்கடானு தாச்சி தூங்கிடுவாராம் டூட்டில.


மலையும் அதிலிருந்து கோடு கோடாய் கிளை பரப்பிக் கொட்டும் நீரும். நதி இணைப்பு நல்ல படியா நடந்தால் இந்த்க நாடே எத்தனை சுபிக்‌ஷமா இருக்கும்னு ஒரு நப்பாசை.


12400 அடி உயரத்தில் Tshangu lake வந்தாச்சு. 'Y ' for 'yak' நு படிச்சதை நிஜமாவே பார்த்தேன். நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குனு சொன்ன எல்லோருடைய ஆசீர்வாதத்தில் Yak ம் கூட மேய்த்தேன். ரொம்ப சாது. 

கை கால் லேசா வெளியே தெரிய முடியல..அத்தனை குளிர். அப்போ..வாசனை மூக்கைப் பிடிச்சு இழுக்க.. வாம்மா.வாம்மானு 'மோமோ'..வித்துண்டு ஒரு குட்டி கடை. உட்காருங்க சூடா பண்ணித் தரேன் என்றாள். அவள் அடுப்பு எரியவே அரை மணியாச்சு. 

மோமோ ரெடி மிளகாய் சட்னியோட..ஆஹா..மோமோ கொடுத்து மோட்சம் காண்பிச்ச நீங்க அமோகமா இருக்கணும்னு வாழ்த்திட்டு..குடிக்க கொஞ்சம் தயிர் கிடைக்குமானு உஸ் உஸ்னு படம் எடுக்கற சவுண்டு விட்ட என் வீட்டுக்காரருக்காக கேட்க..அவள் நக்கலாய் சிரித்து கொதிக்க கொதிக்க டீ கொடுக்க..இன்னும் காரம் மண்டைக்கேற..

ஆனா..அந்த மாதிரி ஒரு 😋 சுவை..நானுந்தான் ரெசிபி கேட்டுண்டு வந்தேன்..ம்ம்ம்ம்..


அதற்கப்பறம் போன இடம் babaji temple' .

(https://en.m.wikipedia.org/wiki/Baba_Harbhajan_Singh)

முன்னமே கார் டிரைவர் அனுமதி வாங்கி இருந்தார் அங்கு செல்ல. உறைய வைக்கும் குளிர். 13000 அடி . harbhajan Singh என்ற ராணுவ வீரர் சமாதி. தண்ணீர் பாட்டில்கள் எல்லாரும் வைக்கணும்நு சொன்னார்கள்.

வெளியே சில பேர் சிப்ஸ் 🍟 dry fruits கூட வைத்து விட்டு வந்தார்கள். அங்கிருக்கும் ராணுவத்தினருக்காக.


பக்கத்தில் இருப்பவர் கூட சரியாக தெரியாத பயங்கர பனி மூட்டம். வழி எல்லாம் மேகக் கூட்டம். விறைக்கும் குளிரில் ' என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று உறுதி எடுத்து கண்ணைச் சுழல விட்டபடி ஜவான்கள். மெய் சிரித்தேன்.


கையும் காலும் டைப் அடிக்க நான் நிற்கிறேன். அவர்களோ நெஞ்சை நிமிர்த்தி நாட்டை ,நம் எல்லையை கண் துஞ்சாது காக்கும் பணியில். 


இவர்கள் தங்கள் சுகமெல்லாம் மறந்திருப்பதால் தான்..நாமெல்லாம் பயமின்றி நாட்டில் உலவுகிறோம் என்று நினைத்தபோது கண்ணில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டியது.


'அவர்கள் கஷ்டம் உனக்கென்ன தெரியும்'. கண்டேன் கண் முன்னே. என் கை என்னை அறியாமலே அவர்களை salute அடித்தது.

ஜெய் ஹிந்த்

No comments: