Thursday, October 5, 2023

விழிகள்

 ஓவியர் Ravindar ooty வரைந்த படம்..

கண்ணே எடுக்க முடியாமல்..

கட்டிப் போட்டதே..


உங்கள் அழகான ஓவியத்திற்கு ..என் சிறு முயற்சி ..இந்த க(வி)தை.


விழி'கள்


'


உன் விழி ..கள் ளன்றோ...?

கள் குடித்த மயக்கம் வருமன்றோ..

கள்ளமில்லா உன் புன்னகையை

காட்டிக் கொடுக்கும் கண்ணாடியன்றோ?


உன் விழி பார்த்த வேளை..என்

வழி மறந்தே போனேன்.


எங்கு சென்ற போதிலும்..

அம்பு போல் பாய்ந்ததே..


துரத்திய உன்  விழிகள்..

தூரத்திலிருந்து ..பேசுமே பல கதைகள்...


விழிகளின் சந்திப்பில்..

வேரூன்றியதே காதல்..

வளர்ந்ததே வளர்பிறையாய்..

பிரிக்க முடியாத உறவாய்..


வழி மேல் விழி வைத்து..உன்

வரவுக்காக நான் காத்திருக்க..

விரைந்ததே..நொடிகளும்..

வேகமெடுத்ததே என் இதயத் துடிப்பும்..


காதல் சிறகை ..காற்றில் விரித்து..

கடலலைகள் கால் உரசிச் சென்ற..

கைப் பிடித்து நின்ற கணங்கள்..நம்

காதலின் ஆழத்தைச் சொல்லுமே..


விழிகளின் சந்திப்பு..

விழா எடுக்கும் வேளையில்..

விதியென்ற ஒன்று ..

விளையாடியதே நம் வாழ்வில்..


நீண்டதொரு கார் பயணம் 

நீயும் நானும் மட்டுமே..

போகலாமா ..

நீ கேட்ட வேளையில்..

நெஞ்சுக் கூடும் விடாமல் படபடக்க..


காதில் நீ கிசுகிசுத்து..

காதல் சொன்ன வேளையில்..

காலன் வந்தான் நம் எதிரில்..

கண் சிமிட்டும் நேரத்தில்..


காணாமல்  போனதே..நாம்

கண்ட கனவெல்லாம்..


ஓட்டியவன் நான் உயிரோடிருக்க..

ஒட்டி வந்த உன்னை..

தட்டிப் பறித்துச் சென்றானே..

தத்தளிக்க விட்டானே..


நினைவு  வந்த நேரம்..

நீயில்லை அங்கே என

நிலை கொள்ளாமல் ..

நானிருக்க..


உன்னவள் உன்னோடு தான் இருக்கிறாள்..

உன் கண்ணாய் உன்னோடு..

உனக்குள்ளே இருக்கிறாள்..

உன் பார்வை ..அவள் தான் இப்போது..


மருத்துவரும் சொன்ன நேரம்..

மயக்கம் வந்தாலும்..

மனதை திடப் படுத்தினேன்..


உன் பார்வையில்..

உலகத்தை காண ..மீண்டும்

உயிர்த்தெழுந்தேன்..


உனக்கு பிடித்தது..

என்னவெல்லாம் என்று..

காட்டிக் கொடு ..சகியே

கண் இழந்த பிள்ளைக்கு

தெய்வம் தந்த அதிசயம்..

நீயன்றோ..

No comments: