Thursday, October 5, 2023

Madhyamar-என்னை பாதித்த பாடல்

 Sunday_topic


என்னை பாதித்த பாடல்


வயதாக ..வயதாக..எல்லாருக்கும் ஒரு ஆசை உண்டு..


அது என்ன சொல்லுங்க பார்ப்போம்?


திருப்பி குழந்தை மாதிரி ஆக மாட்டோமா?

👶 குழந்தை மனசு..அந்த கள்ளமில்லா அன்பும் சிரிப்பும்..ஏன் வயது ஏற ஏறக் குறைகிறது?


எனக்கு ரொம்ப பிடிச்ச..என்னை பாதித்த பாடல் லிஸ்ட்ல முதல்ல வரது இந்தப் பாட்டுதான்.


ஷாந்தி நிலையம் படத்தில் வரும் 


கடவுள் ஒரு நாள்

உலகை காண தனியே வந்தாராம்

கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்

நலமா என்றாராம்..


ஆஹா..அவர் வந்து என்ன கண்டார்..?

கவிஞர் அழகாய்ச் சொல்லுவார் அடுத்து..


ஒரு மனிதன் வாழ்வில்

இனிமை என்றான்

ஒரு மனிதன் அதுவே

கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்..


கோவமோ..எரிச்சலோ வரலை..கடவுளுக்கு களுக்குனு சிரிப்பு தான் வந்ததாம்.


அதோட நினைச்சு பார்க்கிறாராம்..

அட மக்களே..


"கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்

நான் தந்தது

காசும் பணமும் ஆசையும் இங்கே

யார் தந்தது?


 

எல்லை இல்லா நீரும் நிலமும்

நான் தந்தது

எந்தன் சொந்தம் என்னும் எண்ணம்

ஏன் வந்தது?


அதானே..நான் எவ்வளவு அழகான விஷயம் கொடுத்து இங்கே அனுப்பினேன்..நீங்க என்னடானா..இருந்து அனுபவிச்சு, பத்திரமா பார்த்துக்காமல்..

பத்திரம்...பத்திரமாய் எழுதி வாங்கி..பத்திரமா பூட்டி வெக்கறீங்களேப்பா..இது நியாயமானு..

பாவம்..தனியா வந்த அவருக்கு தலை சுத்தி போயிருக்கும்..


இப்படி எல்லா எடமும் சுத்தி ,ஏமாந்து போன நிலையில்..

ஒரு இடம் வராராம்..


அது தான்..


"பள்ளி கூடம் செல்லும் வழியில்

கடவுள் நின்றாராம்..

பச்சை பிள்ளை மழலை மொழியில்

தன்னை கண்டாராம்..'


ஆஹா..கண்டேன்..இந்தக் 👶 குழந்தைகள் மழலையில்னு ..சந்தோஷமாச்சாம்..


அவர் பார்த்து..பரவசமடைந்த விஷயம்..


"உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும்

அன்பை கண்டானாம்

உண்மை கண்டேன் போதும் என்று

வானம் சென்றானாம்.."


அப்பாடா..ஒரு வழியா நான் தேடினது கிடைத்தது..

போதும்..இனி..வேறெதுவும் கண்ணில் படும் முன்னே..

நம்ம இடத்துக்கே போய்டுவோம்..

இந்த சந்தோஷமும் திருப்தியுமே எனக்கு போதும்னு.

வந்த வழியே வானுலகம் போய்ட்டாராம்..


குழந்தை உள்ளம் சொல்ல இதை விட ஒரு பாட்டு உண்டா..?

No comments: