#என்_தேசம்
#சிறுகதை_போட்டி
#விதைகள்
"சார்..சார்.."..காலிங் பெல்லை விடாது அழுத்தியபடி அந்த வீட்டுக்கு பழக்கமான ஜகன்னாதன் சாரின் குரல். .
" இதோ வரேன்..வரேன் ...'..
வாசலுக்கு வந்த சிவகாமி அம்மா" "ஏன் சார்..ஒரு மாசம் என் வீட்டுக்காரருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க மாட்டீங்களா?..இரண்டு வருஷம்.கழிச்சு இப்போதான் மகன், மருமகள் பேரப்பிள்ளை வந்திருக்காங்க. தோட்டத்தில எதோ அதுகளோட செடி நட்டுகிட்டு இருக்காரு..உங்க பஞ்சாயத்தெல்லாம் அப்புறம் வெச்சுக்க கூடாதா?".. சிடுசிடுத்தாள்.
" என்னம்மா செய்யறது. கோபால் சார் தானே நம்ம காலனி அசோசியேஷன் ப்ரெசிடெண்ட். அவரைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாதேம்மா'..
ஜகன்னாதனும் இடத்தை விட்டு அசைய மறுக்க..
பாட்டி..இங்கே என்ன சத்தம் ? என்று பேரன் அவினாஷ் கேட்டு ஓடிவந்தான்.
" கண்ணு..தாத்தாவை கொஞ்சம் வரச் சொல்லுப்பா...
"ஜகன்னாதன் சார் அவனிடமே கோரிக்கை வைக்க..
' தாத்தா..தாத்தா..சீக்கிரம் வாங்க"..கையைப் பிடித்து இழுத்து வந்தான்.
" மன்னிச்சுக்குங்க சார்..நம்ம முதல் கிராஸில நாலாம் நம்பர் வீட்டுல யாரோ நாலு பசங்க குடி வந்திருக்காங்க. இராத்திரி பூரா ஒரே பாட்டில் சத்தமும் ,பாட்டும் கூத்தும் சார். போதாத குறைக்கு அந்தப் பக்கம் நடக்கற நம்ம காலனி பொண் குழந்தைகளை அசிங்கமா கமெண்ட் அடிச்சிகிட்டு இருக்காங்க. போய் கேட்டால்..
எங்க ஓனர் கேட்ட வாடகை கொடுத்திருக்கோம்னு..
அசிங்கமா சண்டைக்கு நிக்கறாங்க சார்.
உங்களுக்கே தெரியும்..அந்த கிராஸ் வழியாத்தான் நம்ம எல்லாரும் வெளியே போக முடியும். கொஞ்சம் முரட்டுப் பசங்களா வேறத் தெரியறாங்க..அதான் சார்..கொஞ்சம் நீங்க வந்து பேசினிங்கனா..."..இழுத்தார்.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த கோபாலின் மகன் மணி.." "அப்பா..அவங்க எதோ ரெளடிக் கும்பலா இருக்கும் போல இருக்கு. நீங்க போய் நிக்காதீங்க. போலீஸ்ல சொல்லி ..
அவங்களுக்கு சரியான மரியாதை கொடுத்தால்..தானா வழிக்கு வருவாங்க.."..
" மணி..அமைதி டா.. எல்லாத்துக்கும் போலீஸ் கிட்ட போய் நின்னா நல்லாவா இருக்கு"..
சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார்.
கோபால் ..அரசுப் பணியில் நல்ல பொறுப்பில் இருந்தவர். பணி ஓய்வுக்கு பின் ,வேறு வேலை செல்ல மனமில்லாமல், என்ன செய்யலாம் என்று யோசித்த வேளை ,அவரைத் தேடி வந்தது இந்தக் காலனியின் அசோசியேஷன் பொறுப்பு.
நகரை விட்டு தள்ளி இருந்த ஒரு இடத்தில், அமைந்த இவர்கள் ' "அருவி நகர்'.
பெயர் தான் அருவி நகர். ஆனால் வெயில் காலத்தில் தண்ணீர் கிடைப்பது ..பெரும் கஷ்டம்.
கோபால் முதல் வேலையாக, தண்ணீர் கனெக்ஷனுக்கு ,ஆளை பிடித்து,அரசாங்க ஒப்புதலுடன் தண்ணீர் வாரத்தில் மூன்று நாள் கிடைக்கச் செய்தார்.
ஆறு தெருக்கள் அடங்கிய அவர்கள் காலனியில் சுமார் இருநூறு வீடுகள் இருந்தது.
குப்பையும் கூளமுமாக காட்சியளித்த வீட்டு வாசல்களும் தெருக்கோடிகளும்..இவர் வந்தபின்..மாறியே போச்சு.
ஒவ்வொரு வீடாகச் சென்று ..சுற்றுப் புறத்தின் தூய்மை பற்றி விளக்குவார்
அரசாங்கம் பூங்காவுக்காக ஒதுக்கிய இடம் ஒன்று இருந்தது. புதர்கள் மண்டிக் கிடந்த அந்த இடத்தை , அழகான பூங்காவாக்க அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம்.
சரியான அரசாங்க அதிகாரியைக் கண்டுபிடித்து, மனு செய்து, ஆவனங்கள் சமர்ப்பித்து ,அந்த காடு போல காட்சியளித்த இடத்தை, கண்கவர் பூங்காவாக்கி..
இதோ..இப்போது வரப்போகும் சுதந்திரதின விழாவில் ,பூங்கா திறப்பு விழா வேலைகள் மும்முரமாக நடை பெறுகிறது.
காலை எழுந்ததுமே..அவர் வீட்டின் முன் கண்டிப்பாக யாராவது ஒரு பிரச்சினை யுடன் நிற்பார்.
இவரும் ஓடிச் சென்று , தீர்வு காண வழி செய்வார்.
இன்னிக்கு வந்தது போல பிரச்சனை..இதுவரை அவர் சந்தித்ததில்லை.
என்ன செய்யப் போகிறார்னு ..எல்லாருக்கும் ஒரே ஆவல்..
" மணி..நீ இவரைக் கொஞ்ச நாள் உங்க ஊருக்கு கூட்டிட்டு போப்பா..
எப்பப்பாரு இதே நாட்டாமை வேலை..சோறு தண்ணி சரியான நேரத்துக்கு கிடையாது.உங்க ஊருல அவருக்கு பாஷை தெரியாது..அதனால் வாலைச் சுருட்டிக்கிட்டு இருப்பாரு.."..
சிவகாமி..கணவரை வடக்கில் வேலை பார்க்கும் மகனுடன் அனுப்ப ஐடியா செய்தாள்.
அப்பா என்ன ஆனாலும் இங்கே விட்டு நகர மாட்டார் என்பது மணிக்கு நன்றாகத் தெரியும்.
"நீங்க யாரும் வர வேண்டாம். நான் மட்டும் போறேன்".. என்று கோபாலின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, மற்ற அசோசியேஷன் மெம்பர்கள் காத்திருந்தனர்.
அந்த வீட்டுக் கதவை தட்டினதுமே..அரை ட்ராயருடன் ஒரு நடுத்தர வயது இளைஞன்..கதவை முழுவதுமாகத் திறக்காமல் வெளிப்பட்டான்.
"தம்பி ..ஒரு உதவி...'..
அது மட்டும் கீழே நின்றவர்கள் காதில் விழுந்தது.
"எதுக்கு நம்ம சார் போய் ..இவனுங்க கிட்ட உதவிக்கு நிக்கோணும்...".. குமுறினார்கள்.
சிரித்தபடி அந்த வீட்டிலேர்ந்து வெளியேறினார் கோபால்.
"என்ன சார்.
.என்னாச்சு..சொல்லுங்க.." ஆவலுடன் எல்லாரும் கேட்க..
" நடக்கப் போறதை நீங்களே பாருங்க'..
பேரனுடன் வீட்டுக்கு நடையைக் கட்டினார்.
' தாத்தா..நீ தாத்தாவா ..
இல்ல தாதாவா?..அவினாஷ் கேட்க..
வீட்டுக்குள் நுழைந்தவரை..சிவகாமி அம்மா கோபக்கனலுடன் பார்த்தாள்.
" பாட்டி..தாத்தா ஒண்ணும் ஜீரோ இல்ல..ஹி இஸ் எ ஹீரோ'..
அவன் சொல்வது புரியாமல் வீட்டில் எல்லாரும் திருதிருனு முழித்தனர்.
அன்று இரவு..பூங்கா திறப்பு விழா வேலைகளை மேற்பார்வையிட்டு ,கோபால் படுக்க போகும்போது மணி பனிரெண்டு ஆகிவிட்டது.
இரவு 1.30.
விசில் சத்தம். கம்பால் ஒவ்வொரு வீட்டையும் தட்டும் சப்தம்.
டார்ச் லைட்டுகள் ஒளி..
எல்லா வீட்டு வாசல் விளக்குகளும் எரிந்தது. யார் ..எங்கேர்ந்து இந்த ரோந்துப் பணியில்...!!!!
காலனி வாசிகளுக்கு ஆச்சரியம்.
அவர்களைத் தொந்தரவு செய்த அதே இளைஞர்கள்.
" போய்த் தூங்குங்க..நாங்க இருக்கோம்"..
இவர்கள் மாற்றத்தின் பின்னணி ..எல்லாராலும் ஊகிக்க முடிந்தது.
அடுத்த நான்கு நாளும், வேலை நேரம் தவிர ,அந்த வீட்டு இளைஞர்களும் பூங்கா திறப்பு விழாவுக்கு உதவ..
அவர்களைக் கண்டு பயந்தவர்களும் ..எங்க வீட்டுக்கு எப்போ வேணாலும் வாங்க..எங்க பசங்க மாதிரிதான் நீங்களும்'..
இந்த உரையாடல்களைக் கேட்கும் போது..கோபாலுக்கு மனசு திருப்தியாக இருந்தது.
அந்த நாளும் வந்தது.
சுதந்திர தின நாள்.
அந்தக் காலனியே ஜொலித்தது.
எங்கும் தூய்மை..எதிலும் நேர்த்தி.
பூங்காவின் வடிவமைப்பு அற்புதமாக இருந்தது.
சுவர்களில் ...நம் இந்தியத் தலைவர்களின் பொன் மொழிகள்.
உள்ளே கண்ணைக் கவரும் மலர்களின் தோட்டம்,புல் வெளி, வயதானவர் அமர பெஞ்ச், சுற்றி நடைபாதை, குழந்தைகள் விளையாட சறுக்கு மரம்,ஊஞ்சல்..இத்யாதி..
விழாவிற்கு வந்த அரசுப் பணியில் இருக்கும் ஆபீஸர்களும், மற்ற பக்கத்து காலனிகளில் இருக்கும் மக்களும் ..மூக்கில் விரலை வைத்தனர்.
தலைவர் கோபால் தன் நன்றியுரை தொடங்கினார்.
" இந்த தேசம் என்னும் பெரும் சமுத்திரத்தில் நாம் ஒரு சிறு துளி.
என்றாலும்..நம் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் நம் வீதிக்கு மட்டுமல்ல..நம் நாட்டுக்கும் சென்று சேரும்.
எந்த இடத்தில் இருந்தாலும்..இது என் தேசம் என்ற உணர்வோடு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவோம். இளைஞர்களே ..
விழித்தெழுங்கள்.
வயதான பின் நான் செய்யத் துவங்கியதை, இப்போதே செய்ய ஆரம்பியுங்கள். இந்த நாடு..உங்களைத்தான் நம்பி இருக்கு. அடுத்த அசோசியேஷன் தேர்தலில் துடிப்பான இளைஞர்கள் பதிவி பொறுப்பேற்க வேண்டுகிறேன்..
ஜெய் ஹிந்த்'
அவர் பேசி முடித்ததும் கரகோஷமும், சந்தோஷமும் அங்கே நிறைய நேரம் எதிரொலித்தது.
ஒரு பெரிய பொறுப்பை முடித்த களைப்பில் அவர் இருக்க..
" அப்பா..நாளைக்கு நாங்க கிளம்பறோம் ப்பா..' ..மணி, அப்பாவிடம் சொல்ல..
" தாத்தா..நீங்க எப்போ எங்க குவார்ட்டர்ஸுக்கு வருவீங்க?"..
பேரன் அவினாஷ் கழுத்தைக் கட்டி கொஞ்சினான்.
அவர்கள் ரெயில் புறப்பட்டது. தங்கள் இடங்களில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடி பயணம் தொடங்க..
" டேய் அவினாஷ்..மறந்தே போய்ட்டோமே டா..திங்கக்கிழமை ஸ்கூல் போகறதுக்குள், சுதந்திர தின பேச்சுப் போட்டிக்கு ரெடியாகணுமே...??என்னங்க..சீக்கிரம் கூகிள் பண்ணி பாய்ண்ட்ஸ் அவனுக்கு எடுத்து கொடுங்க.."..
மணியின் மனைவி அனுஷா பதற..
" அம்மா..எந்த கூகிளும் வேண்டாம்..
தாத்தாக்கிட்டேர்ந்து நான் கற்றுக் கொண்டதை விட, வேறெங்கும் எனக்கு பாடம் கிடைக்காது..நீங்க கவலைப்படாதீங்க..நான் இங்கே கற்றதே என் போட்டிக்கு மட்டுமல்ல..என் வாழ்க்கைக்கும் பெரிய பாடம்."..
பத்தாம் வகுப்பில் படிக்கும் அவினாஷின் பேச்சில் ஒரு தீர்க்கம் இருந்தது.
"என் தேசம்'..இந்த விதையை சரியான நேரத்தில் ..தன் மகனுக்குள் விதைத்த..மாமனாரை மானசீகமாய் வணங்கினாள் அனுஷா.

No comments:
Post a Comment