Thursday, October 5, 2023

Madhyamar-அம்மா கணக்கு

 #சித்திரம்_பேசுதடி

அம்மா கணக்கு


கட்டைப் பையிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்த கீரைக் கட்டுடன் உள்ளே நுழைந்தார் கணேஷ்.

"உங்களுக்கு இதே வேலையாப் போச்சுப்பா...ஒரு நாளைப் பார்த்தா போல இப்படி கீரை..கீரைனு '..

அலுத்துக் கொண்டாள் அவர் மகள் ரம்யா.

" என்னம்மா செய்யறது?..டாக்டர் சொல்லி இருக்காரே..ஏதாவது ஒரு கீரை கண்டிப்பா தினமும் சாப்பிடணும்னு .அதான்'..


" சரி ..சரி..எனக்கு மீட்டிங் இருக்குப்பா..நீங்க டின்னர் சாப்பிட்டு முடிச்சுடுங்க'..

பேச்சை முடிப்பதற்குள்ளேயே ஆஃபீஸ் கால் வர, கதவை மூடிக் கொண்டாள்.


" இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் வந்தாலும் வந்தது..ஒரு நிமிஷம் கூட ஃப்ரீயே இல்ல..

மனசுக்குள் அலுத்தபடி வாங்கி வந்த காய்கறிகள், சாமான்களை எடுத்து ஒழுங்குப்படுத்தினார்.


கணேஷ்...அவருக்கு இரண்டு பெண்கள். முதல் பெண் திவ்யாவின் பிரசவத்திற்கு உதவி செய்ய ,அவர் மனைவி சுபா அமெரிக்கா போய் இருக்கிறார்.

இரண்டாம்  பெண் தான் இந்த ரம்யா. படிப்பு முடிச்சதுமே கேம்ப்பஸ் இண்டர்வியூ வில் செலக்ட் ஆகி ..இரண்டு வருடத்துக்குள் நல்ல பெயர் கம்பெனியில் வாங்கியவள். 

ஒரு workaholic.


கணேஷ் தான் சமையல் இப்போது பொறுப்பு எல்லாம்.

முதல் நாள் ராத்திரியே காய் நறுக்கி வைத்தால் தான் வேலை நடக்கும்.

 இத்தனைக் காலம் ஆஃபீஸ் ஆஃபீஸ் என்று ஓடியதால்,சமையல் கட்டு வேலையில் கொஞ்சம் ஸ்லோதான் அவர்.


அதனால் ரம்யாவையும் உட்கார்த்தி வைத்து,காயும் கீரையும் நறுக்கி வைக்க உதவச் சொல்லுவார்.


அந்த சில நிமிஷங்கள் தான் ரம்யாவுக்கும் அப்பாவுடன் பேசும் நேரம் கிடைக்கும்.


"அப்பா..ஏற்கனவே நாள் பூரா இந்த மவுஸை நகர்த்தி நகர்த்தி விரலெல்லாம் வலிக்கிறதுப்பா..இதுல இந்த ஒவ்வொரு கீரையா கிள்ளி, தண்டுலேர்ந்து நார் உருவி, புல்லு எதாவது இருக்கானு பிரிச்சு..பொடிப் பொடியா நறுக்கி....

அப்பா..ப்ளீஸ்..ப்ளீஸ்.. காய் நறுக்க மட்டும் ..especially இந்த கீரையை நறுக்க மட்டும் ஒரு ஆள் போட்டால் என்னப்பா?.. மனசுக்குள் சில நாளாக இருந்த விஷயத்தை , முன் வைத்தாள் ரம்யா..

' இதோ பாரு ரம்யா ...நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு கப் செய்யறதுக்கு ஆளாவது ஒண்ணாவது...நாளையிலேர்ந்து நான் கீரை வாங்கிண்டு வரலை..அம்மா வந்தப்பறம் ..சாப்பிட்டுக்கறேன்..உனக்கேன் சிரமம்'...கணேஷ்  ஒரு வித ஆயாசத்துடன் பேச..


" அட..ஒரு பேச்சுக்கு சொன்னால்..உடனே கோவிச்சிக்கறேயேப்பா..டாக்டர் சொல்லி இருக்காரே..நீ  தினமும் கட்டாயம்  கீரை சாப்பிடணும்னு ..டோண்ட் வொர்ரி....dad ..you are my darling.உங்க ஹெல்த் தான் எனக்கு முக்கியம்..அம்மா வர வரைக்கும் இந்த வேலையை நானே உனக்கு செஞ்சு தரேன்..ஹேப்பியா?.."


கொஞ்சியபடி கீரைக் கட்டை பாங்காய் ஆய்ந்து வைத்து.."குட் நைட் டாட்.." சோம்பல் முறித்தபடி அவள் ரூமுக்குள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கணேஷ்..அவள் கதவு சாத்தியதை ஊர்ஜிதபடுத்திக் கொண்டு..

ஃபோனை எடுத்தார்.


"ஹல்லோ..சுபா..நம்ம ப்ளான் ஸக்ஸஸ்"..எப்பப்பாரு மவுஸையே நகர்த்திண்டு ,

ராத்திரியில் கை குடைச்சல்னு சொன்னவளுக்கு, தினமும் இந்த கீரை ஆய்ந்து ,கிள்ளி, நறுக்கி ,நார் எடுக்கற வேலை கொடுக்கறதுல,..

விரலுக்கு நல்லதொரு exercise கிடைக்கறது...

கீரை சாப்பாட்டில் சேர்க்கறதால,கண்ணுக்கும் நல்லது. மத்த சக்திகளும் கிடைக்கும். உன் ஐடியா சூப்பர்.


 '....கீரைங்கறது  உணவா மட்டுமில்ல, உன் கைக்கும் பயிற்சினு நான் க்ளாஸ் எடுக்கலாம்னு நினைச்சேன்..

ஆனால்... நீ பலே கெட்டிக்காரி. அவ வழியிலே போய்...எனக்கு சாப்பிட்டே ஆகணும்னு சொல்லி...

சூப்பர் ப்ளான் போ..

அப்பாவுக்குனு சொன்னதும் குழந்தை எப்படி உருகறா தெரியுமா?..அவர் பேசிக் கொண்டே போக..


" போதும் போதும்..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு குட்டைய கொழப்பிடாதிங்கோ..நான் வரும் வரைக்கும் அவளை ஒழுங்கா பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு...குழந்தை அழறான்..மறக்காமல் நாளைக்கு நம்ம கீரைக்காரம்மா ராசாத்திக்கு நன்றி சொல்லிட்டு..அவ பேரன் ஸ்கூல் ஃபீஸுக்கும் பணம் கொடுத்துடுங்கோ.."..

அன்னிக்கு  அவ கொடுத்த ஐடியா தான் இது..நான் அவளை விசாரிச்சதா சொல்லுங்கோ'..எதிர் முனையில் லைன் கட்டானது.


அட..இந்த கீரைக்கார ராசாத்திக்கு தான் எவ்வளவு சமயோசிதம்!!! அந்தக் காலத்து மனுஷினா..சும்மாவா..!!!

மனதுக்குள் அவளுக்கு நன்றி சொன்ன அவரின் 

 கண்களில் கண்ணீர்.. 

 என்ன இருந்தாலும் ..

" என் பொண்ணு ..என் கண்ணு"..


எப்போது உறங்கினார் என்று அவருக்கே தெரியாது..


மிக அழகான ஓவியம் 

# janani keerthivasan ji.


( இந்த ஓவியத்தை பார்த்ததும் என் அம்மா ஞாபகம் வந்தது. அவ்வளவு சுறுசுறுப்பா இருந்தவர்கள், motor neuron problem வந்து ,விரல்கள் coordinate செய்ய முடியாத வேளையில், எங்க டாக்டர் சொன்ன டெக்னிக் இது.தினமும் கீரை வாங்கிண்டு வந்து அம்மா முன்னாடி வெச்சுடுவேன். அம்மாவின் விரல்களுக்கும்,கைக்கும் வேலை கொடுப்பேன்.)


'


No comments: